ஆதீனங்களை அழைப்பு.. கொங்கு மண்டலமே பெருமை கொள்கிறது; திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2023 05:05
அவிநாசி: புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஹிந்து மத ஆதீனங்களை அழைத்ததினால் கொங்கு மண்டலமே பெருமை கொள்கிறது என அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் தெரிவித்தார்.
வருகின்ற 28ம் தேதி டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுகின்றது இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் ஸ்ரீ காமாட்சி சுவாமிகளுக்கு மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு துறையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில்,கோவை சிரவையாதினம் கௌமார மடாலய குமரகுருபர சுவாமிகள்,பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீ இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக நேற்று முன்தினம் காமாட்சி தாச சுவாமிகள் டெல்லி புறப்பட்டார். அங்கு 28ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் சிறப்பு ஆகம வேத வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். இது குறித்து காமாட்சி தாச சுவாமிகள் கூறிய போது புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு இந்துமத ஆதீனங்களை அழைத்ததின் காரணமாக கொங்கு மண்டலமே பெருமை கொள்கிறது.மத்திய அரசின் கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பிரிவிலிருந்து இதற்காக அழைத்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அப்போதைய பாராளுமன்ற கட்டடம் திறக்கும் போது தமிழகத்திலிருந்து சென்ற திருவாவடுதுறை ஆதினம் மூலமாக முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டு பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு மேலாக இன்று வரையும் வைக்கப்பட்டுள்ளது.அதனை புதிய பாராளுமன்ற கட்டடத்திலும் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சைவ ஆதீனங்களை அழைத்துள்ளார்கள் .இதன் மூலம் மிகப்பெரிய மரியாதையை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்கள்.இதன் மூலம் நம் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும், சைவத் திருமுறைகளுக்கும்,அருளாளர்கள் அருளிய இதிகாசங்களும் பெருமை. பாரம்பரியமிக்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது என்பது வரமாக கருதுகிறேன். இந்தப் பெருமையை எனக்குத் தேடித் தந்தது அவிநாசி லிங்கேஸ்வரரின் அருளாசி மட்டுமே. இங்கு நடைபெறும் சிறப்பு வேத ஆகம பூஜைகளில் நாங்கள் கலந்து கொண்டு செங்கோலை பிரதமரிடம் வழங்கி அருளாசி வழங்க உள்ளோம். பாரத நாட்டில் அனைவரும் சமய சார்பற்று அமைதியாகவும் நிம்மதியாகவும் நோய் அற்ற வாழ்வை வாழ வாழ்த்தி அருளாசி வழங்குகிறோம் என்றார்.