பதிவு செய்த நாள்
27
மே
2023
11:05
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில், ஆகாச மாரியம்மன் திருவிழா அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பவனி நடந்தது. கூடை கூடையாக பூக்களைத் தூவி பக்தர்கள் அம்மனை வரவேற்று வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில், ஆகாச மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சமயபுரத்திலிருந்து மாரியம்மன் மல்லிகைப்பூவும் கைவளையலுக்கும் ஆசைப்பட்டு ஆண்டுக்கு 15 தினங்கள் இங்கு வந்து தங்குவதாக ஐதீகம். இங்கு ஆண்டு முழுவதும் அம்மன் உருவம் இல்லாமல் ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும் இதனையே அம்மனாக வழிபட்டு வருகின்றனர். வைகாசி திருவிழாவினையொட்டி நேற்று அரசலாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில், ஆகாச மாரியம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் நள்ளிரவில் பவனி நடைபெற்றது. திருநறையூர், நாச்சியார் கோவில் கிராமங்களில் முக்கிய வீதிகள் உலா வந்த அம்மன் இன்று காலை கோவிலை வந்தடைந்தது. பூக்களை தூவி பக்தர்கள் வரவேற்றனர் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தினமும் காட்சி கொடுப்பார் வரும் 4ம் தேதி பெரிய திருவிழாவும், 7ம் தேதி சிறிய தேரில் அம்மன் வீதி உலா வந்து பிறகு சமயபுரத்திற்கு அம்மன் எழுந்தருளுடன் இவ்வாண்டுக்கான விழா இனிதே நிறைவு பெறுகிறது.