பதிவு செய்த நாள்
27
மே
2023
04:05
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம் காலை 11:40 மணிக்கு நடைபெற்றது. சூரியன், சந்திரன், மயில், சேவல், வேல் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை கோயில் முன்பிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றினர். பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என கோஷமிட்டனர். கொடியேற்றத்தில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழாவில் நாளை (மே.28) தங்க பல்லாக்கு, தங்க மயில், வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. வைகாசி விசாக திருவிழாவில் ஜூன் 1ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், இரவு 7:15 மேல் 8:15 மணிக்குள் நடைபெற உள்ளது. திருவிழாவின் ஏழாம் நாளான ஜூன் 2, காலையில் திருதேரேற்றம் நடைபெறும். அன்று மாலை 4:30 மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாள், ஜூன். 5 அன்று, இரவு கொடி இறக்குதல் நடைபெற்று வைகாசி விசாக உற்சவம் நிறைவு பெற உள்ளது.