பதிவு செய்த நாள்
28
மே
2023
10:05
பல்லடம்: பல்லடம் அருகே, உலக நன்மை கருதி, ருத்ர காளி மற்றும் பகிளாமுகி மகா வேள்வி வழிபாடு நடந்தது.
பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உலக நன்மை கருதி, ருத்ர காளி மற்றும் பகிளாமுகி மகா வேள்வி வழிபாடு நடந்தது. சித்தயோகி பாஸ்கர சர்மா கேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். பொருளாதாரம் பிரச்னை, திருமணத்தடை, தோஷங்கள் விலகுதல், எதிரிகள் தொல்லை நீங்குதல், மகப்பேறு பாக்கியம் பெறுதல், தீவினைகள் அகன்று தொழில் வளம் சிறக்க வேண்டி இந்த சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. முன்னதாக, காலை 8 50 மணிக்கு, கோ பூஜையும் இதையடுத்து, மகா கணபதி பூஜை, கலச பூஜை, கன்னிகா பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 10 மணிக்கு, ருத்ர காளி மற்றும் பகளாமுகி மகா வேள்வி துவங்கியது. பூக்கள், பழங்கள், சமித்துக்கள், தானியங்கள், வஸ்திரங்கள் என பல்வேறு பொருட்களால் வேள்வி வழிபாடு நடந்தது. நண்பகல், 12 மணிக்குமகா பூர்ணாகுதி நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, உக்கிர காளி மற்றும் பத்ரகாளி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காளி அம்மனின் அருள் பெற்றனர்.