பதிவு செய்த நாள்
28
மே
2023
10:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச தரிசன பக்தர்கள் நேற்று இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாட்கள், வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும் இதே நிலைதான்.
கோயிலில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு, திருவாட்சி மண்டபம், இரட்டை விநாயகர், மகா மண்டபம், அன்னபூரணி சன்னதி வழியாக மூலஸ்தானம் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். கட்டணம் செலுத்தும் பக்தர்கள் திருவாட்சி, மடப்பள்ளி மண்டபங்கள், கோவர்த்தனாம்பிகை, அன்னபூரணி சன்னதி வழியாக மூலஸ்தானம் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். அன்னபூரணி சன்னதி முன்பிருந்து மூலஸ்தானம் வரை அருகருகே கம்பிகள் அமைக்கப்பட்டு இலவச, கட்டண பக்தர்கள் தனித்தனியாக வரிசையாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் துணை கமிஷனராக சுரேஷ் பொறுப்பேற்ற பின்பு, 30 நிமிடங்களுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக மூலஸ்தானத்தில் இலவச தரிசன பக்தர்கள் மூன்று வரிசைகளாகவும் கட்டண பக்தர்கள் ஒரு வரிசையாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.
சமீபகாலமாக கோயிலுக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் மூலஸ்தானத்தில் முன்பு போல் இரண்டு வரிசைகளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இலவச தரிசன பக்தர்களை மகா மண்டபத்தில் நிறுத்தி நிறுத்தி அனுப்புவதால் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் எடுத்து சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் மூலஸ்தானத்தில் நான்கு வரிசை செல்ல ஏற்பாடு செய்த துணை கமிஷனர் உத்தரவை உள்துறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கைக்குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள் அவதி அடைகின்றனர். நேற்று மூலஸ்தானத்தில் பக்தர்கள் சென்று போது, பழுதான கம்பிகளில் வெல்டிங் பணி நடந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். கோயில் நடை சாத்திய பின்பு இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் பக்தர்கள் இடையூறு இன்றி சுவாமி தரிசனம் செய்வர். துணை கமிஷனர் சுரேஷ்: வரும் காலங்களில் பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.