ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட பழமையான விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2023 04:05
அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே பரளச்சி மேலையூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விநாயகர் சிற்பம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி அருகே பரளச்சி மேலையூர் கிராமத்தில் பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த ஜோதிலிங்க கருப்பசாமி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது, அந்தச் சிற்பம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பம் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் கூறியதாவது : தமிழகத்தில் பாண்டிய தேசங்களில் தொடர்ந்து அவர்கள் ஆட்சியின் போது எண்ணற்ற கோயில் திருப்பணிகள் செய்துள்ளனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக சிற்பங்களும் கல் எழுத்துகளும் கிடைத்து வருகின்றன: அவற்றில் தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமும் பாண்டியர்களின் திருப்பணியில் உருவானவை. இந்த சிற்பம் இரண்டரை அடி உயரம் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்று ஆயுதத்தையும் தாங்கிய படியும், முன்னிரு கரங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தலையில் மகுடம் தரித்தும், புஜங்களில் ஆபரணங்கள் அணிந்தும், தும்பிக்கையானது மோதகத்துடனும், சிற்பம் முக்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலை நயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தை பார்க்கும் போது இந்த பகுதியில் பெரிய முற்கால பாண்டியரின் சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அவை கால ஓட்டத்திலோ அல்லது அந்நிய படையெடுப்பிலும் அழிந்து இருக்கலாம் என, கூறினர்.