திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் தேவையின்றி நிரப்பப்படும் தண்ணீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2023 04:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குளத்தில் தேவையின்றி தண்ணீர் நிரப்பப்படுவதால் தண்ணீர் வீணாவதுடன் கோயில் நிர்வாகத்திற்கு மின் கட்டணமும் அதிகரிக்கிறது.
ஜிஎஸ்டி ரோடு பகுதியிலுள்ள தெப்பக்குளத்தில் தை மாதம் மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும். திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயில் இருந்து செட்டிகுளம் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த வழிகள் அடைபட்டு விட்டதால் பல ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன் பின்பு தெப்பத் திருவிழா நடைபெறும் சமயத்தில் ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டு நாட்களாக ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஏற்கனவே தெப்பக்குளத்திலுள்ள தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் கிடைக்கிறது. அத்துடன் தற்போது செல்லும் தண்ணீரும் வீணாகிறது. தவிர கோயில் நிர்வாகத்திற்கு தேவையின்றி கூடுதல் மின் கட்டணம் செலவும் ஏற்படுகிறது. பக்தர்கள் காணிக்கை பணம் வீணாகிறது. எதற்காக யார் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்புகின்றனர் என்பது தெரியவில்லை. கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.