பதிவு செய்த நாள்
28
செப்
2012
10:09
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நடந்த கொடியேற்று விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடி தர்காவில் 838ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழாவையொட்டி ஏர்வாடி முஜாபிர் நல்ல இபுறாகிம் மகாலில் இருந்து அலங்கார ரதத்துடன் கொடி ஊர்வலம் புறப்பட்டது. இதை யாதவர் சமூகத்தினர் சுமந்தும், பிறைக் கொடிகளை ஏந்தியும் தர்கா வந்தனர். தர்கா நிர்வாக ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன், செயலாளர் செய்யது பாருக் ஆலிம் அரூஸி, துணை தலைவர் செய்யது சிராஜூதீன் தலைமையில், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன் முன்னிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்கார் குமரன் சேதுபதி மாலை 7 மணிக்கு, பக்தர்களின் "நாரே தக்பீர், அல்லாஹூ அக்பர் தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினார்.முன்னதாக மாவட்ட காஜி சலாஹூத்தீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பாதுஷா நாயகம் புகழ்மாலையை, தர்ஹா ஹக்தார்கள் ஓதினர். தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்படும் ஏர்வாடி சந்தனக்கூடு விழா, அக்.,9ல் நடக்கிறது.