பதிவு செய்த நாள்
30
மே
2023
11:05
சேலம்; சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள நாயன்மார்கள் சன்னதியில், சுவாமி சிலைகளுக்கு பின் வைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து, திருவெம்பாவை பெருவிழா கழக டிரஸ்ட் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோவிலில், 2022 செப்.,7ல் கும்பாபிஷேகம் நடந்தது. எட்டு மாதங்கள் ஆன பின்னும் நாயன்மார்கள் உள்ளிட்ட சுவாமி சிலைகள் பின்னால் பெயர் எழுதப்படாமல் இருந்தது. இப்பணியை மேற்கொள்ள, கோவில் உதவி கமிஷனர் சரவணனிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர் அளித்த வாய்மொழி உத்தரவின்படி, 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுவாமி பெயர் பலகைகள் பிளாஸ்டிக்கில் தயார் செய்யப்பட்டு, அறநிலைத்துறை அதிகாரிகளிடம் காண்பித்து, சிலைகளுக்கு பின் ஒட்டப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் பெயர்கள் எப்படி பொறிக்கலாம் என, புகார் வந்ததாக கூறி அகற்றி விட்டனர். 63 நாயன்மார்களில் யார் எந்த நாயன்மார் என பக்தர்களுக்கு தெரிவதில்லை. எனவே, மீண்டும் சுவாமி சிலைகருக்கு பின் பெயர் பலகை வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து உதவி கமிஷனர் சரவணன் கூறியதாவது: நாயன்மார்கள் மற்றும் பிற சுவாமி சிலைகளுக்கு பின், பிளாஸ்டிக் பெயர் பலகை வைக்கப்பட்டது. இதுகுறித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் சென்றதால், சிலைகளுக்கு பின் வைக்கப்பட்ட அனைத்து பெயர் பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன. விரைவில் பெயின்ட் மூலம் சுவாமியின் பின் பெயர் எழுதப்படும். அனுமதியின்றி பெயர் பலகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். உதவி கமிஷனர் அனுமதியின்றி, பெயர் பலகைகள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதை அதிகாரிகள் கவனித்து இருந்தாலே, போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் செல்லாமல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். பழமையான கற்சுவரும் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும். கோவிலுக்குள் என்ன நடக்கிறது என, தெரியாமல் அங்கிருக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படுவது, கண்டனத்துக்கு உரியது என, பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.