பதிவு செய்த நாள்
30
மே
2023
01:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் நடந்த ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் கோயில் கைங்கரியம் அனுமான் வேடமிட்டு பக்தி பரவசத்துடன் வலம் வந்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தல வரலாற்றை பக்தர்களுக்கு நினைவு கூறும் வகையில் மே 27ல் ராமலிங்க பிரதிஷ்ட விழா துவங்கியது. ராமாயணம் வரலாற்றில் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பூஜைக்கு, சீதை சிவலிங்கம் சிலை வேண்டும் என கூறியதும், அனுமான் சிவலிங்கத்தை தேடி செல்கிறார். இதனால் தாமதம் ஆனதும், சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் உருவாக்கினார். பின் சிவலிங்கத்துடன் வரும் அனுமான், சீதை வடிவமைத்த சிலையை கண்டு கோபமடைந்து, தன் வாலால் சிவலிங்கத்தை கட்டி இழுத்ததும், வால் அறுந்து விடுகிறது. பின் சீதை வடிவமைத்த சிவலிங்கத்தை அனைவரும் பூஜித்து தரிசித்தனர். இதனை நினைவு கூறும் வகையில், நிறைவு விழாவான நேற்று கோயில் கைங்கரியம் சந்தோஷ் அனுமான் வேடமிட்டு அனுமான் சிலையை தூக்கி கொண்டு கோயில் முதல் பிரகாரத்தில் பக்தி பரவசத்துடன் வலம் வந்து ராமநாதசுவாமியை தரிசித்தார். அங்கு கூடியிருந்த கோயில் ஆய்வாளர் பிரபாகரன், கண்காணிப்பாளர் முருகன், பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளீதரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.