பதிவு செய்த நாள்
28
செப்
2012
10:09
நகரி: திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த, பிரமோற்சவ விழாவின் போது, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 15.40 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பிரமோற்சவ விழா உண்டியல் வருமானம், கடந்த ஆண்டை விட, 33.06 சதவீதம் அதிகம். விழா நடந்த, ஒன்பது நாட்களில், 5.51 லட்சம் பக்தர்கள், வெங்கடேச பெருமாளை தரிசித்துள்ளனர். 20.52 லட்சம் லட்டு பிரசாதம், விற்பனை செய்யப்பட்டு உள்ளது. லட்டு பிரசாத விற்பனை, கடந்த ஆண்டை விட, 15.34 சதவீதம் அதிகம். தங்கும் விடுதி வாடகை வசூலும், 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. திருப்பதியில் இருந்து, 1.44 லட்சம் பக்தர்கள், பாத யாத்திரையாக திருமலைக்கு வந்துள்ளனர். பிரம்மோற்சவ நாட்களில், 2.23 லட்சம் பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். திருப்பதி தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி மேற்பார்வையில், கோவிலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு சீனிவாச ராஜு கூறினார்.