பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
03:06
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
*பிரம்மமுகூர்த்த வேளையில்(காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.
* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.
* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிபாட்டு முறை: வைகாசி விசாக நாளில் அதிகாலை எழுந்து நீராடி முருகா எனக் கூறி விபூதி அணிந்து கொண்டு முருகன் படத்தின் முன்நின்று முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட வேண்டும். பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமணிய ஷோடச நாமாக்கள் கூறி அர்ச்சித்து தூபதீபம் காட்டி நைவேத்யம் செய்து வழிபட்டால் முருகனின் அருள் பரிபூரணமாகக் கிட்டும். வைகாசி விசாகத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்குவார்கள். மழலைப்பேறு, புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்குக் கிட்டும். வைகாசி பவுர்ணமியில் சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாக குண்டம் அமைத்து வழிபடுவது நலம். அன்று யாகம் செய்வதற்கு குண்டத்தை தாமரை மலர் வடிவில் அமைத்து சந்தனாபிஷேகத்தை விசேஷமாகச் செய்வார்கள். அதனை தரிசித்தால் மகாலட்சுமியின் அருள் கிட்டும். சிவனுக்கு அலரிப்பூ செவ்வந்திப்பூ, செந்தாமரை மலர்களை மாலையாக அணிவித்து அர்ச்சிப்பார்கள். மகிழம்பூ நிறத்தில் பட்டு வஸ்திரம் சாத்தி, எள் அன்னம் படைத்து முக்கனிகளால் அபிஷேகித்து, பசும்பாலில் மாங்காயை வேக வைத்துப் படைப்பார்கள். இதை ஆகம நூல்கள் சொல்கின்றன. இப்படிச் செய்வதால் பாவங்கள் அகலும், புண்ணியம் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.