பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
04:06
முற்றுப்பெற்ற ஞானிகள் திருவடிகளைப் பற்றி பூஜிக்க பூஜிக்க ஞானத்தலைவன் முருகன்தான் ஞானமளிப்பவன் என்பதை உணரலாம். ஞானப்பண்டிதனின் அருளைப் பெற சலிப்படையாமல் தொடர்ந்து ஞானிகள் திருவடிகளைப் பற்றியும், முருகப்பெருமானது திருவடிகளைப் பற்றியும் நாமஜெபமாகிய பூஜையை செய்திட வேண்டும். நாமஜெபம்தனை எந்த அளவிற்கு மனம் உருகி தொடர்ந்து செய்கின்றோமோ அந்த அளவிற்கு முருகனின் பார்வை நாமஜெபம் செய்கிறவர் மீது படபட, அது பூஜிப்பவர்களுக்கு ஆசியாய், அருளாய் மாறி அவர் தம்மை சார்ந்திடும். ஞானபண்டிதனின் கருணைப்பார்வை நம்மீது படபட, அந்த கருணையே அருளாக மாறி நம்மை வழிநடத்தும்.
பூஜிப்பவன் பெற்ற அருளே பூஜிப்பவனுக்கு நல்லறிவாய் மாறி மேலும் மேலும் முருகனது அருளினைப் பெறத் துõண்டும். மீண்டும் மீண்டும், முருகனிடத்து பெற்ற கருணையாகிய அருளைக் கொண்டு, மீண்டும் மீண்டும் முருகனை வணங்கி வணங்கி, தாம் பெற்ற அருளினால் மேலும் அருளைப் பெற்று பெற்று, அருளே வடிவான முருகனது அருளை அணு அணுவாக, அணு அணுவாக தொடர்ந்து பெறவேண்டும். இப்படி முருகனது அருளைப் பெறுவதே அந்த முயற்சியே அந்த அருளை பெறுவதற்கான சலிப்பின்றி செய்கின்ற பூஜையே தவமாகும். முழுமையான அருளைப் பெறுகின்ற முயற்சியை தவமாய் செய்ய செய்ய, கருணையே வடிவான முருகனது மனம் கனிந்து நம்மை கனிவு கொண்டு வழிநடத்தி, அருளினை நம்மீது அளவிலாது அருளி நிற்கநிற்க, அழியக்கூடிய இளமை, தேகம், செல்வம் என அனைத்திலும் நாம் இருந்தபோதும் அழியக்கூடிய அவற்றின் துணைக்கொண்டே அழியாப் பொருளை அடைகின்ற மார்க்கத்தினிலே நம்மை உடனிருந்து தாயினும் மேலான கருணையோடு தடுமாறும்போதெல்லாம் தாங்கி நின்று தாழாது உயர்த்தி நம்மையும் ஒரு பொருட்டாய் மதித்து மனமிரங்கி வழிநடத்தி செல்வான் தயவுடைத் தெய்வம் முருகப்பெருமான்.
முருகனது அருள் பெருக பெருக, அவனே நமக்கு தாயாய், தந்தையாய், வல்ல சற்குருவாய் இறுதியில் தெய்வமாய் ஆகி நின்று, நம்மை சார்ந்து ஒரு நிலைதனிலே அருள் பெருகி பெருகி பெருகி நம்மையும் அவனைப் போலவே ஆக்கி, பெறுதற்கரிய மரணமிலாப் பெருவாழ்வை நமக்கு அருளியேவிடுவான் முருகப்பெருமான். தாயினும் மிக்க தயவுடை தயாநிதி முருகனது திருவடிகளை எந்த சோதனை வந்தாலும் விடாது இறுகப் பற்றிக் கொண்டு, இன்னுயிர் நீப்பினும் உமது பொன்னடி மறவேன் என்றே திடசித்த வைராக்கியத்துடன் அயராது பாடுபட்டால்தான் யாருக்கும், தேவர்க்கும், மூவர்க்கும் எட்டா ஞானபண்டிதனின் திருவடிகள் அன்பர் தம் விடாமுயற்சியினால், அன்பினால் கட்டுப்பட்டு தோன்றி காத்தருளும் என்பதை உணரலாம். இப்படி அவரவர்க்கு அவரவர் செய்த வினைகள் காரணமாக ஏற்பட்ட இந்த இக லோக வாழ்வை முழுமனதாய் ஏற்றுக் கொண்டு, அதில் இருந்து கொண்டே, இல்லறக் கடமைகளைச் செய்து கொண்டே துறவிற்கான நிலை நின்று, பர வாழ்விற்கான முயற்சியையும் விடாது தொடர்ந்திட வேண்டும். அதை விடுத்து இல்லற கடமைகளை நமக்கு விதிவசத்தால் ஏற்பட்ட கடமைகளை புறக்கணித்துவிட்டு யாருமற்ற காடுகளிலே சென்று அனாதை போல சுற்றித் திரிந்து, தம் மனதிற்கு தோன்றியபடி தவம் செய்வதாய் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இறைவனால் அளிக்கப்பட்ட இந்த அற்புதமான மானுட தேகத்தை கொடுமையாய் வருத்தி, எடுத்த ஜென்மத்தின் பயனை அடையாமல் இறந்து போவது என்பது பெரும் பாவமாகும். ஆதலினால் எல்லாம் அருளவல்ல முருகனது திருவடிகளை பூஜித்திட இவ்வுண்மையெல்லாம் தெளிவாக உணரலாம்.
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று சொல்வதன் நோக்கமே இனி பிறவா மார்க்கத்தை அடைவதற்காக இருக்க வேண்டுமே தவிர மற்ற நிலையில்லாத எந்த ஒன்றையும் விரும்பி காலத்தை வீணாக்கக் கூடாது.