முருகனுக்கு வேல் தான் அடையாளம். எல்லா தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி இருந்தாலும், வேலுக்கு தனிச்சிறப்புண்டு. முருகனே தேவசேனாபதியாக பன்னிரண்டு கைகளில் பல ஆயுதங்களை வைத்திருந்தாலும் வேல் மட்டும் அவருக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. அதற்கு சக்தி ஆயுதம் என்று பெயர். தமிழில் சக்திவேல் என்று குறிப்பிடுவர். இதனை தனியாக வைத்து வழிபடும் வழக்கமும் உண்டு. முருகனின் வேலின் பெயரால் வேலாயுதம் என்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவர்.
பாம்பு கனவுக்கு தீர்வு: ஆந்திரா, கர்நாடகா பகுதியில் முருகனுக்கு மனிதவடிவில் சிலை அமைப்பதில்லை. நாகப்பாம்பின் வடிவமாக கருவறையில் எழுந்தருளச் செய்வர். சஷ்டி திதியன்று முருகன்கோயில்களில் நாகராஜா பூஜை நடத்துவர். கனவில் பாம்பு தோன்றினால், அதற்குப் பரிகாரமாக சுப்பிரமண்ய ப்ரீதி என்னும் பெயரில் புற்றுக்கு பால் விடும் வழக்கமும் உண்டு. பாம்பைக் கண்டால் ஸுப்பராயுடு என்று முருகனின் பெயரால் குறிப்பிடுவர்.