பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
06:06
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார் தஞ்சாவூர் அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் சிற்பத்தை கண்டெடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வயலூர் கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த ராமய்யன், கும்பகோணம் அரசு மகளிர் கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் கலா மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் சிற்பம் என தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறியதாவது : இந்தச் சிற்பம் 3 அடி உயரம் கொண்ட பலகை கண்ணில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது கரத்தில் பாம்பையும், வலது முன் கரத்தில் சூலத்தையும், இடது முன்கரத்தில் கபாலத்தையும் கொண்டவாறு உள்ளது. தலையில் நீண்ட ஜடாபாரமும், மகுடமும், காதுகளில் பத்திர குண்டலங்களும், மார்பில் ஆபரணங்களும், முப்பரி நூலும் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் பாம்பினைஅணிந்தவாறு நிர்வாணமாக நின்ற கோலத்தில் சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது இப்பகுதியில் இருந்த சோழர்களின் சிவன் கோவில் இருந்து, அழிந்திருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சேத்ரபாலர் சிற்பமும், ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் இவற்றை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் ஒரு நந்தி, சூலம், மழு, கொடி போன்ற சிவ வழிபாட்டை குறிக்கும் விதமாக கல்லில் கோட்டுருவாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 வரிகள் கொண்ட கல் எழுத்துக்களும் காணப்படுகிறது. அதில் உள்ள செய்தியானது, சர்வசித்தி வருடம் தை மாதம் ஐந்தாம் திரு நல்ல நாளில் முடி சூடிக்கொண்டதன் பெயரில் மாடு தானம் வழங்கப்பட்டுள்ளதாக, செய்தி உள்ளது. இதில் முடிசூடியவரின் பெயர் சிதைந்து போனதால் உறுதியாக கூற முடியவில்லை. எழுத்தமைதியை வைத்து பார்க்கும் போது தஞ்சை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட கல்வெட்டாக இதை கருதலாம் என கூறினர்.