பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
06:06
கோவை :பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை, ஹிந்துசமய அறநிலையத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறி யாரேனும் ஆக்கிரமித்தால், மீண்டும் கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதோடு, சட்டபூர்வ நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியது வரும் என எச்சரித்துள்ளனர் அதிகாரிகள்.
கடந்த சில தினங்களுக்கு முன், பேரூர் அருகே உள்ள சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.40 ஏக்கர் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள 360 ஏக்கர் விவசாய நிலம் எவ்வளவு, தற்போது உள்ள குத்தகைதாரர்கள் யார், அறநிலையத்துறை விதிமுறைகளின் கீழ் சரியாக குத்தகை செலுத்தி வருகின்றனரா என்பது குறித்த விபரங்களை, சேகரித்து வருகின்றனர். இச்சூழலில், பேரூர் நொய்யல் ஆற்றுப்பாலத்திற்கு கிழக்கே, 16 ஏக்கர் நிலம் அறநிலையத்துறை விதிமுறைகளின் கீழ் இல்லாததால், அதை கடந்த சில தினங்களுக்கு முன் மீட்டு, கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், சர்வேயர் துணையுடன் கோவிலுக்கு சொந்தமான நிலம் குறித்த தற்போதைய நிலையை கணக்கெடுத்து வருகின்றனர். தற்போதுள்ள குத்தகைதாரர்கள் விதிமுறைகளை மீறியிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்திருந்தாலோ, அந்நிலத்தை உடனடியாக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’கோவில் நிலம் தொடர்பாக, அனைத்து குத்தகைதாரர்களையும் அழைத்து, அறிவுரை வழங்கியிருக்கிறோம். முறையாக குத்தகை செலுத்தவும், ஆக்கிரமிப்புகள் ஏதும் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறோம். அதையும் மீறி யாரேனும் ஆக்கிரமித்தால், கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம். ஆக்கிரமிப்பாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.