திருச்செந்துார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2023 11:06
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (2ம் தேதி) சிறப்பாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினத்தை வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா இன்று (2ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி திருச்செந்துார் கோயிலில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதைமுன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும் திருச்செந்துாரில் முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.