ஆழ்வார்திருநகரி: ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்திருவிழா 9ம் திருநாளான நேற்று காலை நடந்தது. முன்னதாக காலை 7.30 மணிக்கு கோரதத்தில் தேருக்கு சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினார். நான்குநேரி மதுரகவி வானுமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். ஏராளமான பக்தர்களும் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் ரதவீதிகளில் வலம் வந்தது. ரதவீதியில் நான்குநேரி மதுரகவி வானுமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகளுக்கு பரிவட்டம் கட்டிமாலை மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இன்று தாமிரபரணி நதிக்கரையில் சுவாமி நம்மாழ்வாருக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.