பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
05:06
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா, கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, வைகாசி விசாகத்தையொட்டி இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு, அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, காலையில் வெள்ளி கவசத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவமூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்க கவச அலங்காரத்தில், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில், தங்கதேரோட்டம் நடந்தது. வைகாசி விசாகத்தையொட்டி, இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.