பதிவு செய்த நாள்
05
ஜூன்
2023
12:06
சிவகிரி: சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. சிவகிரியில் திரவுபதி அம்மன் கோயிலில் வைகாசி பூக்குழி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு சமுதாயம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணன், அர்ஜூனன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வீதியுலா ஆகியவை நடந்தன. பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் முன்புள்ள பூக்குழி திடலில் அக்னி வளர்க்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் கிருஷ்ணன், அர்ச்சுனன், பாஞ்சாலி சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கோயில் பூசாரி மாரிமுத்து பூக்குழியில் இறங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கையில் குழந்தைகளுடனும், விளக்குகளுடனும், தீ சட்டியுடனும் பூக்குழி இறங்கி, நேர்ச்சை செலுத்தினர். இன்று (5ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கண்ணதாசன், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) கேசவ ராஜன், காப்புகட்டி சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாண்டியராஜன், தண்டல் காளிமுத்து, பூசாரி மாரிமுத்து மற்றும் அனைத்து காப்புகட்டி பக்தர்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.