திருச்செந்துார் கோயிலில் மீண்டும் அடாவடி; அலகு குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்ட செக்யூரிட்டிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2023 12:06
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்த பக்தரை தனியார் செக்யூரிட்டிகள் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2ம் தேதி வைகாசி விசாக பெருந்திருவிழா நடந்தது. பாதயாத்திரையாக முருகப்பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். இதனால் சண்முகவிலாச மண்டபத்தில் உள்ளே நுழைய விடாமல் தடுப்பு வேலிகள் அமைத்து தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருச்செந்துாரில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பாதயாத்திரையாக அலகு குத்தி வந்த பக்தர் சண்முக விலாச மண்ட பகுதியில் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் அவரை உள்ளே விடாமல் பணியில் இருந்த செக்யூரிட்டிகள் அலகு குத்தி வந்த பக்தரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து அவரை தள்ளிவிட்டுள்ளனர். இதனை அங்கு தரிசனத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரைச் சேர்ந்த நவசக்தி என்பவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் செல்போனை பறித்து சென்றனர். மேலும் புறக் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரும் அவரது செல்போனில் இருந்த பதிவை அழிக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முக விலாசம் மண்டப பகுதியில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தடுப்பு வேலிகளை தள்ளி உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.