அஸ்ஸுபர்கான், அல்அஹ்தம் என்னும் தோழர்கள் இருவர் நபிகள் நாயகத்தை சந்தித்தனர். ‘‘தமீம் கோத்திரத்தின் தலைவன் நான். என் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். அநீதி ஏற்படாமல் அவர்களை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டுக் கொடுக்கவும் நானும் செயல்படுகிறேன். இது அருகில் இருப்பவருக்குத் தெரியும்’’ என அஸ்ஸுபர்கான் கூறினார். அதற்கு அல்அஹ்தம், ‘‘ஆம். மக்கள் இவர் சொன்னால் கட்டுப்படுவார்கள். அவர்களை பாதுகாக்கிறார்’’ என ஒரு சில வார்த்தைகளில் மட்டும் புகழ்ந்தார். ஆனால் அஸ்ஸுபர்கானோ, ‘‘பொறாமையால் அவர் என்னை பற்றி அதிகம் கூறவில்லை’’ என புகார் அளித்தார். உடனே கோபப்பட்ட அல்அஹ்தம், ‘‘உம்மீது நான் பொறாமை கொண்டேனே? நீர் உமது சகோதரர்களால் சபிக்கப்பட்டவர். புதிய பணக்காரர். முட்டாள் குழந்தைகளின் தந்தை. குடும்பமே கைவிட்ட தனி நபர் நீர்’’ என படபடப்பாக கூறினார். சற்று நேரத்திற்குப் பின் அமைதியுடன், ‘‘இவரைக் குறித்து கூறியது உண்மையே. அவர் மீது திருப்தியுடன் இருந்த போது நல்லவற்றைக் கூறினேன். கோபமாக இருந்தபோது தீயவற்றைக் கூறினேன். இரண்டு நிலையிலும் உண்மையாக இருந்தேன்’’ என்றார் அல்அஹ்தம். இதையெல்லாம் பொறுமையாக கேட்ட நபிகள் நாயகம் ஆச்சரியப்பட்டார். எவ்வளவு வேகமாகவும், அழகாகவும் வாதிடுகிறாரே வியந்தார்.