பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
05:06
திருப்பரங்குன்றம்; மதுரை விளாச்சேரியில் கொல்கத்தா களிமண்ணில் தயாரிக்கப்பட்ட சுவாமி சிலைகள், விலங்குகள், பறவைகள், பழங்கள் விற்பனையாகி வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட், காகித கூழ் ஆகியவற்றில் நவர்த்திரி பொம்மைகள், சுவாமி சிலைகள், கிறிஸ்மஸ் குடில்கள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. ராமலிங்கம் கூறுகையில்: கொல்கத்தா களிமண் மிகவும் நைசாக இருக்கும். அங்கு வேலைப்பாடுகள் மிக நுணுக்கமாக உள்ளது. இங்குள்ள களிமண்ணால் பெரிய சிலைகள் செய்ய முடியவில்லை. கொல்கத்தாவில் கண்காட்சிக்கு சென்றபோது இச்சிலைகள் விற்பனைக்கு இருந்தன. விவரம் அறிந்து அங்குள்ள தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்து அங்கிருந்து பெரிய சுவாமி சிலைகளுடன், சிறிய சிலைகளையும் வரவழைத்து விற்பனை செய்து வருகிறேன். நவராத்திரி காலங்களில் கொலு பொம்மைகள் அதிக அளவு விற்பனையாகிறது. மக்கள் கேட்கின்ற அளவிற்கு கொலு பொம்மைகளை தயாரித்து கொடுக்க முடியவில்லை. மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொல்கத்தாவிலிருந்து சுவாமி சிலைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. 12 இஞ்ச் முதல் இரண்டரை அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் ரூ. 350 முதல் ரூ. 2,500 வரையிலும், அம்மன் சிலைகள் ரூ. 150முதல் ரூ. 2,500 வரையிலும், காய்கறி பழங்கள் பொம்மைகள் ஒன்று ரூ. 15 முதல் விற்பனை செய்யப்படுகிறது. என்றார்.