பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
01:06
கம்பம்: கம்பம் காசிவிஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயில்களில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது.
கம்பம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 2003 ல் நடைபெற்றது. திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இங்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகளாகிறது. இடையில் கொரோனா தொற்று காலமாக இருந்தால் நடைபெறவில்லை. ஒரே வளாகத்தில் சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் இங்கிருப்பது தனிச்சிறப்பாகும். காசி விஸ்வநாதர் கோயிலில் திருப்பணி செய்ய எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சி செய்து அனுமதி பெற்றுத் தந்தார். திருப்பணி துவங்க இருப்பதை முன்னிட்டு இன்று காலை சஷ்டி மண்டபத்தில் விமானங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பணி வேலைகளில் கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மற்றும் சென்னை பி.எல்.பி. நிறுவனங்கள் சார்பில் பெரும்பாலான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக பி.எல்.பி. நிறுவனங்களின் சேர்மன் ஆர் பாஸ்கர் கூறுகையில், " மூலவர், அம்மன் சன்னதிகளுக்கு வர்ணம் பூசுவது, மராமத்து பணிகள், விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, பைரவர், நவக்கிரக சன்னதிகளுக்கு மராமத்து மற்றும் வர்ணம் பூசுதல், கிழக்கு, மேற்கு சால கோபுரங்கள் வர்ணம் பூசுதல் மற்றும் மராமத்து, சிவன், அம்மன் சன்னதிகள் உட்புற மண்டப வேலைகள், முருகன் சன்னதி, சஷ்டி மண்டபம் மேல்தளம் தட்டோடு பதித்தல், சிவன் | அம்மன் சன்னதிகளில் மேல்தளத்தில் தட்டோடு பதித்தல், அரசமர நாயகர் சன்னதி மராமத்து மற்றும் வர்ணம் பூசுதல், கொடிமரம் செப்புத் தகடு மெருகேற்றுதல் மற்றும் கல்காரம் வர்ண வேலைகள் உள்ளிட்ட திருப்பணிகளை எமது ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மற்றும் பி.எல்.பி. நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்கிறோம்" என்றார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்.ஏ. ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் வனிதா, ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி ஆர்.பாஸ்கர், கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் ஒ.ஆர்.நாராயணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயபாண்டியன், முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராம கிருஷ்ணன், தி .மு.க. நகர் செயலாளர்கள் வீரபாண்டியன், செல்வக்குமார், மாணவரணி பால்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.