பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
01:06
திருநெல்வேலி: தாமிரபரணி நதியை பாதுகாக்க குடியரசு தலைவர், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என பரசமய கோளரிநாத ஆதீனம் தெரிவித்தார்.
புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா மற்றும் வடநாட்டு ஆன்மிக யாத்திரைமுடித்து நெல்லை வந்த பரசமய கோளரிநாத ஆதீனத்தின் 39வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தத்மனந்த சரஸ்வதி சுவாமிகளுக்கு நெல்லை டவுன் பகுதி மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டடம் தமிழ் ஆதீனங்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழக ஆதீனங்களுக்கு மரியாதை அளித்து அனைத்து வகையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. தமிழ் மரபுப்படி செங்கோல் வழங்கவே தமிழ் ஆதீனங்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டனர். நவீன தொழில் நுட்பத்துடன் புதிய பார்லிமென்ட் அமைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதிக்கு நாடு முழுவதும் நல்லபெயர் உள்ளது., அந்த நதியை பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. பிரதமர் மோடி, உள்துறை அமைச்ர், குடியரசு தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து தாமிரபரணி நதியை பாதுகாப்பது தொடர்பான கோரிக்கையை ஆதீனங்கள் சார்பில் வலியுறுத்தப்படும். இவ்வாறு சுவாமிகள் கூறினார். இதில் கோளரிநாதர் ஆதீன ராஜராஜேஸ்வரி பீடதலைவர் அனந்த நாராயணன், செயலாளர் ஆறுமுகராஜ், பொருளாளர் அசோகராஜ், நிர்வாகிகள் குமார், முருக முரளிதரன், கந்தன், ராஜேந்திரன், சுவாமி சுப்பிரமணியன் உட்படபலர் கலந்து கொண்டனர்.