பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
02:06
மேட்டுப்பாளையம்; ஆலாங்கொம்பில் உள்ள, வெள்ளை விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறுமுகை அருகே ஆலங்கொம்பில், பவானி ஆற்றின் கரையோரம், நூறாண்டுகள் பழமை வாய்ந்த, வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து, வர்ணம் தீட்டப்பட்டது. அதை தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா, எட்டாம் தேதி காலை, பிள்ளையார் வழிபாடுடன், முளைப்பாலிகை மற்றும் புனித நீர் தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை அடுத்து மாலையில் முதல் கால வேள்வி பூஜையை அடுத்து, இரவு எண்வகை மருந்து சாற்றப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை முடிந்த பின், வேள்வி சாலையிலிருந்து, மூலமூர்த்திகளுக்கு அருள் நிலை ஏற்றப்படுகிறது. பின்பு காலை, 8:00 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்களை கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், மூலவர் சுவாமி மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர். சிறுமுகை நலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இந்த விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஜடையம்பாளையம் ஊராட்சித் தலைவர் பழனிசாமி, காரமடை ஊராட்சி ஒன்றிய சேர்மன் மணிமேகலை மகேந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகர் பெருமானை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.