பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
17:12
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம்ரோடு கொருமடுவு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 27ஆவது ஆண்டுவிழா மற்றும் திருமணத்தடை நீக்கும் மாபெரும் யாகம் நடைபெற்றது. இன்று காலை 8மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது.பால தண்டாயுதபாணியை வணங்கினர்.அதைதொடர்ந்து நவக்கிரக ஆலயத்தை சுற்றி விட்டு யாக குண்டத்தில் நவதானியங்களை தலையை சுற்றி போட்டனர். ஆண்கள் வாழை மரத்திற்கும்,பெண்கள் பாலை மரத்திற்கும் மாலை அணிவித்து மாங்கல்ய தோஷத்தை நீக்கினர். அனைவரும் கருந்துளசி,தொட்டாசிணுங்கி மூலிகை செடிகளுக்கு குங்குமம் மஞ்சளிட்டு வணங்கி ராகு,கேது தோஷம்,சனிதோஷம், நவக்கிரகதோஷம், மாங்கல்ய தோஷம், உள்ளிட்ட தோஷங்கள் நீங்க சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு மதியம் 12.30க்கு மகாபூர்ணாகுதி பூஜையும்,1மணிக்கு பார்வதி பரமேஷ்வரனுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. யாகத்தில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உட்பட 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனிச்சாமி தலைமையில் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் பங்களாபுதுார் போலீசார் ஈடுபட்டனர்.