பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
05:06
பல்லடம்: பல்லடத்தில், பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணிக்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளன. பல்லடம் மங்கலம் ரோட்டில், பழமை வாய்ந்த விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், கோவில் சேதமடைந்து காணப்படுகிறது. சமீபத்தில், அறநிலையத்துறை அடுத்த அனுமதியின் பேரில், இக்கோவில், திருப்பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. கோவில் மற்றும் கோவிலைச் சுற்றி, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைகள் ஆகியவை மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டன. இதையடுத்து, கோவில் மற்றும் கடைகளை முழுமையாக இடித்துவிட்டு, கட்டுமான பணிகளை புதிதாக துவங்கி திருப்பணி மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம், கோவில் சிலைகள் அருகாமையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக இடத்துக்கு மாற்றப்பட்டு, பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, பழைய கட்டடங்களை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. கட்டடங்கள் மற்றும் பழைய கோவில் உள்ளிட்டவை முழுமையாக அகற்றப்பட்ட பின் கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.