பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
04:06
திருவாலங்காடு : திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் உள்ளது. இந்த கோவிலின் தேர் கமலத்தேர் என அழைக்கப்படுகிறது. 55 அடி உயரம் கொண்ட இந்த தேர் திருவாலங்காடு காவல் நிலையம் அருகே, தேர் மண்டபம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூன்று பக்கம் சுவராலும், தேர் வெளி வரும் பக்கம் தகரத்தாலான பலகை கொண்டு மண்டபம் மூடிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தகர பலகைகள் கீழே விழாமல் இருக்க, இரும்பு கம்பிகள் வாயிலாக பிணைக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களாக திருவாலங்காடு பகுதியில் வீசிய சூறாவளி காற்றால், தகர பலகைகள் பிணைக்கப்பட்டு இருந்த கம்பிகள் அறுந்து, ஒவ்வொரு பலகையாக விழுந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, ஒரு தகர பலகை விழுந்த நிலையில், மற்றொரு பலகை அந்தரத்தில் தொங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனத்தில் பயணிக்கும் இந்த தேரடி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள தகர பலகைகளால், அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கோவில் நிர்வாகம்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.