பதிவு செய்த நாள்
12
ஜூன்
2023
12:06
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தில், பழைமையான திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி வசந்த திருவிழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி முதல், தினமும் மாலை 2:00 மணி முதல் 6:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, வில் வளைப்பு, சுபத்திரை மாலையிடுதல், ராஜசூய யாகம், துகிலுரிதல் உள்ளிட்ட நாடகமும், நேற்று அர்ஜுனன் தபசு நாடகமும் நடந்தது. இதனால், அதிகாலையில் கோவில் வளாகத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சிக்காக, 30 அடிக்கு மேல் உயரமுள்ள தபசு மரம் நடப்பட்டது. பின், அர்ஜுனன் தவ வேடத்தில் தபசு மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடிவாறு ஏறினார். அதை தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து, அரஜுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் தபசு மரத்தின் கீழ் பக்தியுடன், திருமணம், குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து, மேலிருந்து வீசப்படும் எலுமிச்சம் பழத்தை மடியேந்தி பிடித்து வழிபட்டனர். குழந்தை பெற்ற தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை தபசு மரத்தில் ஊஞ்சல் கட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். வரும் 21ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.