குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2023 10:06
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா; திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீ மிதித்த பக்தர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா 5 வில்லியநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, தர்மர் பிறப்பு, அம்மன் பிறப்பு, வில்வளைப்பு, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், அரவான் பலியிடுதல், கர்ணமோட்சம் என்று வரலாறு சிறப்புமிக்க நிகழ்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான 17ஆம் நாளான நேற்று இரவு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை துரியோதனன் படுகளம் முடிந்தது. அதனைதொடர்ந்து காவிரி தீர்த்தவாரி படித்துறையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதையடுத்து பக்தர்கள் தீ மித்த்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் தீ மிதித்த பக்தர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. இந்த சாட்டையானது அம்பாளுடன் பிறந்ததனால் தீ மிதித்த பக்தர்கள் செய்த தீவினைகள், பில்லி, சூனியம் எல்லாம் பறந்துபோகும் என்பது ஐதீகமாகும். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.