திண்டிவனம்: தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை சுவாமி ரங்கநாதர் அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து இரண்டாம் சனிக்கிழமையான நேற்று முன்தினம் மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 8 மணியளவில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது.இதில் லட்சுமிநாராயண பெருமாள் சிங்க வாகனத்தில் ராதா, ருக்மணியுடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.