பதிவு செய்த நாள்
01
அக்
2012
10:10
ஈரோடு: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில், பாதியில் நிறுத்தப்பட்ட, 12 ஜோதிர் லிங்கங்கள் அமைக்கும் பணியை தொடர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. சிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம் உள்பட முக்கிய நாட்களில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவர். கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில், 2008ல் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி நடந்த போது, அம்மன் சன்னதிக்கு வெளியே வலது புறம், பன்னிரு ஜோதிர் லிங்கங்கள் அமைப்பதற்காக, அந்தந்த கோவில்களின் அமைப்பு படியே, 12 சன்னதிகள் கட்டப்பட்டன. சோமநாதர், மல்லிகார்ஜூனர், மகா காளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், கேதார்நாத், பீமாசங்கர், கிருஷ்ணேஷ்வரர், ராமேஸ்வரர், நாகேஸ்வரர், வைத்யநாத், திரியம்பகேஸ்வரர், விஷ்வநாத் ஆகிய, 12 ஜோதிர் லிங்கங்கள் அமைக்க, பீடம் பணி முடிவடைந்தது. ஆனால், சிற்ப சாஸ்திரம் மற்றும் வைதீகப்படி, அம்மன் சன்னதிக்கு வலது பகுதியில், ஜோதிர் லிங்கங்களை அமைக்க கூடாது என, கூறப்பட்டது. இதனால், அந்த சன்னதிகளில் சிலை நிறுவப்படாமல் அப்படி கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஸ்வாமி சன்னதிக்கு வடபுறம், கபால தீர்த்தக்கிணற்றின் அருகே, ஜோதிர் லிங்கம் அமைப்பதற்கான சன்னதிகள் கட்டும் பணி, ஜரூராக நடந்தது. திடீரென பணிளை அதிகாரிகள் நிறுத்தினர். பீடம் அமைக்கும் பணிகளை உடனடியாக துவங்கி, சிவலிங்கங்களை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், பீடம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. சோமநாதர், மல்லிகார்ஜூனர், மகாகாளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், கேதார்நாத் உள்ளிட்ட, 12 லிங்கங்களும் தயாராகி வருகிறது. நல்ல நாள் பார்த்து, பீடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.