கோவிலாங்குளத்தில் காளை குத்தி பட்டான் கல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 12:06
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம்கிராமத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த காளை குத்தி பட்டான் கல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன், தேவாங்கர் கலை கல்லூரி உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அங்கு ஒரு சிற்பத்தை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கோவிலாங்குளம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள், பழமையான சிவன் கோவில், பெருமாள்கோவில் என பல வரலாற்று சின்னங்கள் உள்ளன. இந்த ஊரில் தற்போது காளை குத்தி பட்டான் கல் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக நடு கற்கள்போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவு கல். கால்நடைகளை வைத்தே கணக்கிடப்பட்டு வந்தன. அத்தகைய செல்வங்களான மாடுகளை பகைவர்கள் கவர்ந்து செல்லும்போது அதனை மீட்டல் தொடர்பான சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்கு நடு கல் வைப்பது மரபு. தற்போது நாங்கள் கண்டறிந்த நடுக்கல்லில் 2 காளைகள் உள்ளன. காளைகளுக்கு மேலாக ஒரு வீரன் வழங்கியபடியும், ஆடை ஆபரணங்களுடன் வலது கையின் இடுக்கில் போர்வாளும், இடையில் குறு வாளும் வைத்தபடி நின்ற கோலத்தில் உள்ளது. வலது புறம் மனைவியின் சிற்பமும் உள்ளது. இதனை பார்க்கும் போது காளைகளை கவர்ந்து செல்லும்போது நடந்த போரில் இறந்த வீரனுக்கு நடுக்கல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது காளைகளை அடக்குதல்போட்டியில் வீரன் இறந்திருக்க வேண்டும்.இந்தச் சிற்பம் 17ம் நூற்றாண்டை சார்ந்தது, என்றனர்.