பதிவு செய்த நாள்
15
ஜூன்
2023
05:06
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்கள் உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர். கடந்த 1998ல், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய கும்பாபிஷேகம் நடத்தப்படாதது குறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்பின், 2021 இறுதியில் பாலாலயம் நடத்தி, திருப்பணிகள் துவக்கப்பட்டன. உயர் நீதிமன்ற வல்லுனர் குழு வழிகாட்டுதலின்படி, சுவாமியர் சன்னிதிகள், மஹா மண்டபம் உள்ளிட்டவை, பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்கிடையே, பூதத்தாழ்வாருக்கு உற்சவம் நடத்தக் கோரி, ஆறு மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். கோவில் நிர்வாகம், கடந்த மே 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, அந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தது. திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், கும்பாபிஷேகம் நடத்துவதில் காலதாமதமானது. கடந்த ஒன்றரை மாதங்களாக, திருப்பணிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, தற்போது மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது. நரசிம்மர், பூதத்தாழ்வார், ராமர், பன்னிரு ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சன்னிதிகள் போன்றவற்றை மாற்றியமைக்கும் பணிகளும், மஹா மண்டப மேற்பகுதியில் சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.