பதிவு செய்த நாள்
15
ஜூன்
2023
05:06
வில்லிவாக்கம், வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் நேற்று, வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் உற்சவம் நடந்தது. வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், கடந்த 6ம் தேதி முதல் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில், சுவாமி தாமோதர பெருமாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில், ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும் ரதாரோஹனம் திருத்தேர் உற்சவம், நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. பின், முக்கிய நான்கு மாடவீதிகள் வழியாக, தேர் இழுக்கப்பட்டு, வீதி உலா வந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மாலை கேடயம் உற்சவத்தில் சுவாமி எழுந்தருளி, சிறிய மாட வீதிகளில் உலா வந்தார். இன்று காலை 7:00 மணிக்கு, பல்லக்கு வெண்னை தாழி திருக்கோலத்திலும், இரவு 8:00 மணிக்கு குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.