முத்துபந்தலில் திருஞானசம்பந்தர்; பூத கணங்களை அனுப்பி அழைத்து வர கட்டளையிட்ட தேனுபுரீஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2023 12:06
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் எழுந்தருளிய முத்துபந்தல் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கோவில் பாடல் பெற்ற தலம். காமதேனுவின் 4 பெண்களுள் பட்டி என்பவள் தேனுபுரீஸ்வரரை நாள்தோறும் பூஜித்து முக்தி பெற்றதால் இத்தலத்திற்கு பட்டீஸ்வரம் என பெயர் வந்தது. இக்கோவிலில் ஆனி மாதத்தில் முத்துபந்தல் விழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் தேதியில் புராண வரலாற்றுப்படி திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்க கொடிய வெயிலில் வருவது கண்டு பொறுக்க முடியாமல் தேனுபுரீஸ்வரர் தனது பூத கணங்களை அனுப்பி திருஞான சம்பந்தரை வெயில் அவர் மேலே படாவண்ணம் முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் அழைத்து வர கட்டளையிட்டதுடன் அவ்வாறு அவர் வரும் அழகை தான் காண வேண்டும் என்பதற்காக தன் எதிரில் உள்ள நந்தியம்பெருமானை சற்று விலகி இருக்குமாறும் கட்டளையிட்டதால் இத்தலத்தில் நந்தியம்பெருமான் இறைவனுக்கு நேரே இல்லாமல் சற்று விலகியே இருப்பதை இன்றும் காணலாம். இவ்விழாவை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் நாள் இவ்விழா நடைபெறும். அதன்படி திருஞானசம்பந்தர், தேனுபுரீஸ்வரர் வழங்கி அருளிய முத்துபந்தலில் காட்சி அளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், 30 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள முத்து பல்லக்கினை சுமந்துகொண்டு சென்றனர். முத்துப்பல்லக்கில் பவனி வந்த திருஞானசம்பந்தரை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.