பதிவு செய்த நாள்
17
ஜூன்
2023
01:06
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, ’ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கின்றனர். அனைத்து ராசியினருக்கும் பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ராஜகோபுரத்தில் ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில், ஒரு கலசம் கீழே விழுந்து உடைந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் கலசம் அமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ராஜகோபுரத்தில் நான்கு கலசம் மட்டுமே இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தியடைகின்றனர். எனவே, கோவிலில் திருப்பணிகள் செய்து, ராஜகோபுரத்தில் புதிய கலசம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.