கோவில் பணியாளர்களின் சம்பளத்தில் கை வைத்த அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2023 01:06
மதுரை: கோவில் பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியில் அறநிலையத்துறை கை வைத்ததால் எதிர்காலத்தில் ஓய்வூதியம், முதிர்வு தொகை குறையும் என அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். கமிஷனர் முரளீதரனை உயர் அதிகாரிகள் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 2006ம் ஆண்டிற்கு முன்பு வரை சேமநலத்திட்டம் இருந்தது. இதன்படி அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். கோவில் நிர்வாகம் தன் பங்காக 10 சதவீதம் தரும். பணி ஓய்வுபெறும்போது பிடித்தம் செய்த தொகையை பங்களிப்பு தொகையாக கோயில் நிர்வாகம் தந்து கொண்டிருந்தது. இதில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சேமநலத்திட்டத்திற்கு பதில், 2006க்கு பின் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்கீழ்(பி.எப்.,) பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி அடிப்படை சம்பளத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் தொழிலாளர்களுக்கு போதுமான முதிர்வு தொகை, ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்றால் மட்டுமே பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. 2014 முதல் இதன்அடிப்படையில்தான் கோயில் பணியாளர்களுக்கும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில் செலவினங்களை குறைக்க பணியாளர்களின் அடிப்படை சம்பளமாக ரூ.15 ஆயிரம் என நிர்ணயித்து பிடித்தம் செய்ய வேண்டும். அதற்கு மேல் பிடித்தம் செய்தால் அந்தந்த கோவில் செயல் அலுவலரே அதற்கு பொறுப்பு என தணிக்கை அதிகாரிகள் பரிந்துரைத்ததை அமல்படுத்த அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார். இது பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் கூறியதாவது: கமிஷனரை உயர் அதிகாரிகள் சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள். அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பு தொகையாக நாங்களும், கோவில் நிர்வாகமும் பணம் செலுத்தி வருகிறோம். பணி ஓய்வுபெறும்போது போதுமான ஓய்வூதியமும், முதிர்வு தொகையும் கிடைக்கும் என நம்பி இருந்தோம். இந்நிலையில் அனைத்து பணியாளர்களுக்கும் அவர்கள் சீனியர்களாக இருந்தாலும்கூட அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரம் என கணக்கிட்டு பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பணி ஓய்வுபெறும்போது ரூ.5 லட்சம் வரை எங்களுக்கு இழப்பு ஏற்படும். ஓய்வூதிய தொகையும் குறையும். இதுகுறித்து ஜூன் 19ல் கமிஷனரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். இவ்வாறு கூறினர்.