பதிவு செய்த நாள்
21
ஜூன்
2023
06:06
புதுடில்லி: அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2024 ஜன., 14ல், ராமர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் கோவில் முறைப்படி பக்தர்களுக்காக திறக்கப்படும் அறிவிக்கப்பட்டு்ள்ளதையடுத்து பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டி முடிக்கப்பட்ட கோயில் வளாகத்தில் யாத்திரை வசதி மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடைக் கொட்டகை, நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் தங்குமிடம் ஆகியவை அடங்கும்.