திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி கருங்கல் ஆலய அழகியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது.
திருப்பாச்சேத்தியில் கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய நாயகி அம்மன் கோயிலில் கடந்த சில வருடங்களாக திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து சிவாச்சார்யார்கள் வலம் வந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் அதிகாலை முதலே திருப்பாச்சேத்தி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். காலை பத்து மணிக்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், செந்தில் பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகம் முடிந்ததை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பாச்சேத்தி கிராமத்தார் செய்திருந்தனர்.