பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
12:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில், சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக்கமல வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதிஉலா நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக்கமல வாகனத்திலும் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லையப்பர் கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் மாலை 4 மணிக்கு பிரியா பிரபுவின் பக்தி சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து நந்தினி சேகர் பரதநாட்டியம், பார்கவி சந்திரசேகரன் பக்தி இன்னிசை மற்றும் தாமிரசபை நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. இரவு 8 மணிக்கு தாமோதர தீட்சதரின் சிவலீலா தமிழ் இன்னிசை சொற்பொழிவு நடந்தது. சோழவந்தான் பிரசாத் மிருதங்கம், கல்லிடை ஸ்ரீராம் ஆர்மோனியம் வாசித்தனர். நிகழ்ச்சிகளை கவிஞர்கள் கணபதி சுப்பிரமணியன், முத்துசாமி, பிரபு தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தினமலர், கரூர் வைஸ்யா பாங்க், மயன் நிறுவனத்தினர் செய்திருந்தனர். முன்னதாக நெல்லை, நாகர்கோவில் தினமலர் வெளியீட்டாளர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன், வக்கீல் வைத்தியநாதன், தினமலர் தினேஷ் ஆகியோரை கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி கவுரவித்தார்.