பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
02:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், புனித அந்தோணியார் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த, 18ம் தேதி தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸுக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவிழா சிறப்பு கூட்டு பாடற் திருப்பலியை ஆயர் நிறைவேற்றினார். இந்த திருப்பலியில் பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், கோவை மறை மாவட்ட மீட்பு பணி மைய இயக்குனர் அந்தோணி ஏசுராஜ், மாதா தொலைக்காட்சி இயக்குனர் வின்சென்ட் புஷ்பராஜ், ஆயர் செயலர் அருள் இருதயராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு பாதிரியார் விக்டர் பால்ராஜ் தலைமையில் தேர் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், 12 பாதிரியார்கள் பங்கேற்றனர். திருப்பலி முடிந்ததும், அந்தோணியார் சுருபம் தாங்கிய ஆடம்பர தேர்பவனி துவங்கியது. ஆலயத்தில் இருந்து பூக்களால் அலங்காரம் செய்த தேர் பவனி, ஊட்டி சாலை, பஸ் ஸ்டாண்ட், அண்ணாச்சி ராவ் சாலை, செந்தில் தியேட்டர் சாலை, மீண்டும் ஊட்டி சாலை வழியாக, ஆலயத்தை அடைந்தது. அதை தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் செய்திருந்தார்.