பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
03:06
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சந்திரமணி நகரில் உள்ள ராஜ கணபதி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பழைய புதூர் ரோடு சந்திரா மணி நகர், குறிச்சி நகர், கே.ஆர். நகர், சுப்பையா நகர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழா கமிட்டி சார்பில் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, தீர்த்த குடம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் விமான கோபுர கலசம் வைத்தல், முதல் கால யாக பூஜை, திருமுறை பாராயணம், ராஜகணபதி விக்கிரகத்துக்கு அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி பீடத்தில் பொன் பொருள், நவரத்தினங்கள் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை தொடக்கம், மகா தீபாராதனை தொடர்ந்து ராஜகணபதி, விமான கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து தச தரிசனம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.