பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
03:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே ஜங்கமநாயக்கன் பாளையத்தில் உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜங்கமநாயக்கன் பாளையத்தில் நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த, 23ம் தேதி காலை, 9:00 மணிக்கு தொடங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு மங்கள இசை, சுப்ரபாதம், அக்னி ஆராதனம், கால சாந்தி, பிரதான ஹோமம், யாத்ரா தானம் ஆகியன நடந்தன. கும்பாபிஷேக விழா நேற்று காலை, 9:30 மணிக்கு நடந்தது. மேலும், அரச மரத்து ஆனந்த விநாயகர், சொர்ண கால பைரவர், நவக்கிரகம் மற்றும் சீதா சமேத ராமச்சந்திர சுவாமி உட்பட அனைத்து சந்நிதிகளின் விமானங்களுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆஞ்சநேயர் பஜ்ரங்கி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேகத்தை ஸ்ரீராம் பட்டாச்சாரியார், தல அர்ச்சகர் சிவஸ்ரீ வைகண்ட சிவ சிவாச்சாரியார் நடத்தி வைத்தனர். மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழாவில், குருடம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.