களை கட்டும் புரவி எடுப்பு திருவிழாக்கள்; மானாமதுரையில் புரவிகள் செய்யும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 01:06
மானாமதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களான சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்ட கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு திருவிழாக்கள் மீண்டும் களை கட்ட துவங்கியதையடுத்து மானாமதுரையில் புரவிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம நன்மைக்காகவும், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள காவல் தெய்வங்களுக்கு புரவி எடுப்பு என்னும் குதிரை எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து ஒரு சில ஊர்களில் மட்டும் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த வருடம் தென் மாவட்டங்களில் சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களில் பிறவி எடுத்து திருவிழா நடத்துவதற்காக தென் மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள் மானாமதுரையில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களிடம் புரவிகள் செய்வதற்கு அதிகளவில் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். கிராமப்பகுதிகளில் மீண்டும் புரவி எடுப்பு திருவிழா களைகட்ட துவங்கியுள்ளதையடுத்து தொழிலாளிகள் கலைநயமிக்க புரவிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் சிலர் கூறுகையில்,கடந்த 2 வருடமாக புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடம் மீண்டும் புரவி எடுப்பு திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற ஆரம்பித்துள்ளதையடுத்து மானாமதுரை, சுந்தரநடப்பு ஆகிய பகுதிகளில் புரவிகள், காளை மாடுகள்,சுவாமி உருவங்கள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு புரவி செய்வதற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது.இதனை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கிராம ஒற்றுமைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் செய்வதினால் அனைவரும் சந்தோஷமாக இத்திருவிழாக்களை கொண்டாடி வருவதாக கூறினர்.