சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியாத விரக்தியில் அடுத்தகட்ட இடையூறுகளை இந்து சமய அறநிலைய துறை தொடங்கி உள்ளது என கோவில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் ஜி. சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சமீபத்தில் ஆனிப் பெருந்திருவிழா நடந்தது. அதையொட்டி 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடராஜர் முன்புள்ள மேடையான கனகசபையில் ஏறி நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக தடை விதிப்பதாக தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.
இந்த தற்காலிக தடையை நிரந்தர தடையாக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி தில்லைக் காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா காவல்துறையினருடன் கோவிலுக்குள் சென்று அறிவிப்பு பலகையை அகற்றினார். அது தொடர்பாக இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு விவகாரம் பெரிதானது. நேற்று முன்தினம் மாலை செயல் அலுவலர்கள் சரண்யா வேல்விழி ஆகியோர் நான்கு பெண் காவலர்களுடன் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து கனகசபை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தீட்சிதர்கள் தரப்பு அறிவித்தது. இந்த விவகாரத்தில் செயல் அலுவலர்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக 11 தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத் துறை புகார் அளித்து வழக்கும் பதிவாகி உள்ளது. இந்த சர்ச்சை பெரிதான நிலையில் தீட்சிதர் தரப்பு வழக்கறிஞர் ஜி.சந்திரசேகர் அறநிலைய துறை மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது: அறநிலைய துறை தீட்சிதர்களுக்கு தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் நடப்பதாக குற்றம்சாட்டி பணிய வைக்க முயன்றனர். அந்த விவகாரத்தில் பிரச்னை அவர்கள் பக்கமே திரும்பியது. அதையடுத்து இப்போது கனகசபை பிரச்னையை அறநிலைய துறை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். ஆனி மற்றும் மார்கழி திருவிழாக்களின் போது இதுபோன்று நான்கு நாட்கள் கனகசபை தரிசனத்திற்கு தடை விதிப்பது வழக்கமான ஒன்றுதான். அதனால் பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கோவிலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு தீட்சிதர் அறநிலையத் துறை அதிகாரிகளோடு கைகோர்த்து எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது. கோவிலை மீண்டும் அறநிலைய துறை நிர்வாகத்தில் கொண்டுவரப் போவதாக கூறியுள்ள அத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. இந்த அணுகுமுறை தவறானது. இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
கோவில் தீட்சிதர்களில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர் கூறியதாவது: ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் நான்கு நாட்கள் தடை வழக்கமான ஒன்று. உள்ளூர் பக்தர்களுக்கு அது தெரியும். கடந்த மார்கழியில் நாங்கள் வாய்மொழியாக அந்த தடையை விதித்தபோது அறிவிப்பு பலகை வாயிலாக தெரிவித்தால் வசதியாக இருக்கும் என இணை ஆணையர் தான் எங்களுக்கு ஆலோசனை தெரிவித்தார். அதன்படிதான் செய்தோம். கோவில் நிர்வாகம் எங்களிடம் இருக்கும்போது அரசு அதிகாரி உள்ளே அத்துமீறி நுழைந்து தன் பணி பாதிக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளது வேடிக்கையானது. உண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசுக்கு வேலையில்லை. கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த செயல் அலுவலர்கள் சரண்யா வேல்விழி அவர்களுடன் வந்த நான்கு பெண் காவலர்கள் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அறநிலைய துறை அதிகாரிகள் கோவிலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பிலும் பக்தர்கள் சார்பிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு கூறினார்.
ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர். ரமேஷ் கூறியதாவது: தன் பொது அதிகாரம் அல்லது தான் பிறப்பித்த சட்டத்தின் அடிப்படையில் மட்டும் தான் ஓர் அரசு அரசாணையை வெளியிட முடியும். ஆனால் 2022ம் ஆண்டு கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என வெளியிடப்பட்ட அரசாணை இந்த இரண்டின் அடிப்படையிலும் வரவில்லை. அறநிலைய துறை சட்டத்திற்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் அது விரோதமானது. அந்த ஆணையை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு தொடுத்தால் வெற்றி பெறுவர். ஒரு தனி மத உட்பிரிவுக்கு சொந்தமான கோவில் விவகாரத்தில் அறநிலைய துறையினர் அத்துமீறியது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தில்லைக் காளியம்மன் கோவில் செயல் அலுவலராக சரண்யா நியமிக்கப்பட்டதே சட்டவிரோதமானது. அவர் எப்படி சிதம்பரம் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தன் பணி பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்க முடியும்? நான் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடுத்துள்ளேன். அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் ஒரு தனி மத பிரிவு அல்லது மிக சிறிய சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டு நடவடிக்கைகளில் அரசு இடையூறு செய்தால் அதற்கு என்ன தீர்வு என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும் என கேட்டுள்ளேன். வழக்கு விசாரணைக்கு வரும்போது அதன் முடிவுகள் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் பெருந்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த இரண்டு முறை மட்டும்தான் நடராஜர் வெளியில் வருவார். எனவே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொன்னம்பலம் மற்றும் அதன் முன் உள்ள கனகசபை ஆகியவற்றில் உள்ள மரத்தாலான உத்திரங்கள் சுவர்கள் ஆகியவற்றில் சந்தனம் மற்றும் பல்வேறு வகை மூலிகைகள் கலந்த கலவையை தீட்சிதர்கள் பூசுவர். அதற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஆகும். மேலும் அந்த திருவிழாக்களின் இறுதி நாட்களில் தான் ஏற்கனவே சாத்தப்பட்டுள்ள நகைகளோடு விலைமதிப்பில்லாத தொன்மையான நகைகளும் நடராஜருக்கு சாத்தப்படும். அந்த சிறப்பு நகைகளை வைத்துள்ள பெட்டிகள் அந்த நான்கு நாட்களில் கனகசபையில் வைக்கப்படும். எனவே பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதியே அந்த நான்கு நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை உள்ளூர் மக்களும் பக்தர்களும் நன்கு அறிவர் என்கின்றனர் தீட்சிதர்கள்.
கனகசபை தடை ஏன்?: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் பெருந்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த இரண்டு முறை மட்டும்தான், நடராஜர் வெளியில் வருவார். எனவே, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பொன்னம்பலம் மற்றும் அதன் முன் உள்ள கனகசபை ஆகியவற்றில் உள்ள மரத்தாலான உத்திரங்கள், சுவர்கள் ஆகியவற்றில், சந்தனம் மற்றும் பல்வேறு வகை மூலிகைகள் கலந்த கலவையை தீட்சிதர்கள் பூசுவர். அதற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஆகும். மேலும், அந்த திருவிழாக்களின் இறுதி நாட்களில் தான், ஏற்கனவே சாத்தப்பட்டுள்ள நகைகளோடு, விலைமதிப்பில்லாத தொன்மையான நகைகளும் நடராஜருக்கு சாத்தப்படும். அந்த சிறப்பு நகைகளை வைத்துள்ள பெட்டிகள், அந்த நான்கு நாட்களில் கனகசபையில் வைக்கப்படும்.எனவே, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதியே அந்த நான்கு நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை உள்ளூர் மக்களும், பக்தர்களும் நன்கு அறிவர் என்கின்றனர் தீட்சிதர்கள்.@@block@@