ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் : பக்தர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2023 11:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு ரூ. 200 கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். முன்பெல்லாம் கோயிலில் பக்தரிடம் கட்டணம் வசூலிப்பதில் ஹிந்து அறநிலையத்துறை முக்கியத்துவம் காட்டாது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இக்கோயிலில் பக்தரிடம் பணம் பறிப்பதிலே குறிக்கோளாக உள்ளது. இதனால் பக்தர்களிடம் ஏழை, பணக்காரர் என ஏற்ற தாழ்வு ஏற்படுகிறது. இந்நிலையில் இக்கோயிலில் அதிகாலை 5 முதல் 6 மணி வரை நடக்கும் ஸ்படிகலிங்க பூஜை தரிசனத்திற்கு ஒரு பக்தருக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கின்றனர். இது குடும்பத்துடன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கோயிலுக்குள் பாகுபாடு காட்டும் தமிழக அரசின் செயலுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் : கடந்த காலத்தில் ஸ்படிலிங்க தரிசனத்திற்கு வசூலித்த ரூ. 50 கட்டணம் பெயரளவில் மட்டுமே உள்ளது. தற்போது ரூ. 200 டிக்கெட் விற்பதிலே கோயில் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் தரிசிக்க முடியாமல் திரும்புகின்றனர். இது பக்தர்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்துகிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே ரூ. 200 கட்டணத்தை ரத்து செய்து, பழைய கட்டண முறையை பின்பற்ற வேண்டும் என்றார்.