அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் பழைமையான பைரவர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே மந்திரிஓடை கிராமத்தில் பழமையான சிற்பம் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் கருப்பசாமி, தர்மராஜா கொடுத்த தகவலின் படி, அந்த கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், நடராஜன், சரத்குமார், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அந்த சிற்பம் பிற்கால பாண்டிய காலத்தைச் சேர்ந்த பைரவர் சிற்பம் என தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறியதாவது : சிவனின் 64 முகூர்த்தங்களில் பைரவரும் ஒன்று. இவரின் வாகனம் நாய். தற்போது இவரை பைரவர், யோக பைரவர், கால பைரவர், ஆதிபைரவர், உக்கிரபைரவர் என பல பெயர்களில் வழிபட்டு வருகின்றனர். நாங்கள் கண்டறிந்த பைரவர் சிற்பம் 3 அடி உயரத்தில் உள்ளது. 4 கரத்துடன் காலடியில் தனது வாகனமான நாயுடன் இடம் பெற்றுள்ளது. தலைப்பகுதியில் தீச்சுவாலையும், காதுகளில் பத்திர குண்டலமும் வலது பின் கரத்தில் உடுக்கையும் வலது முன் கரத்தில் சூலத்தையும் பிடித்த படியும் இடது புற கரங்கள் சிதைந்தும் காணப்படுகிறது. மார்பில் ஆபரணமும் முப்புரி நூலும் உள்ளது. இடையில் பாம்பினை ஆடையாக அணிந்து நிர்வாண கோலத்தில் சிற்பம் நேர்த்தியான கலை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம் என கூறினர்.