தேவரம்பூரில் 12 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு: கிராமத்தினர் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2023 05:07
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் தேவரம்பூரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை கிராமத்தினர் உற்சாகமாக கொண்டாடினர்.
காட்டாம்பூர் ஊராட்சி தேவரம்பூரில் ஆதினமிளகி அய்யனார், பொன்னரசு கூத்த அய்யனார் கோயிலுக்கு 2001 ல் புரவி எடுப்பு விழா நடந்தது. அதன் பின் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் கிராமத்தினர் ஒன்று கூடி பாரம்பரிய விழாவை இந்த ஆண்டு கொண்டாட முடிவு செய்தனர். அதனையடுத்து இரு வாரங்களுக்கு முன்பு காப்புக் கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து பிடிமண் கொடுக்கப்பட்டு புரவிகள் தயாரிப்பும், சேங்கை வெட்டுதலும் நடந்தது. நேற்று இரவு சாமியாடிகள் அழைக்கப்பட்டு சூளையிலிருந்து புரவிகள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் கிராமத்தினர் உற்சாகம் அடைந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து புரவிகளை வரவேற்றனர். தொடர்ந்து புரவிகளுக்கு தீபாராதனை நடந்தது. இன்று மாலை புரவிகள் ஊர்வலமாக கிராமத்தினரால் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நிலைநிறுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனையை கிராமத்தினர் தரிசித்தனர்.